சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கலந்து கொண்டார். இந்த ஆலோசனை கூட்டம் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியத்தின் மேனேஜிங் டைரக்டர் ஹரிஹரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களை பாதுகாக்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
இயற்கையிலேயே சென்னை சிறந்த ஒரு புவியியல் அமைப்பை கொண்ட நகரம் எனவும், சென்னையைச் சுற்றிலும் பல்வேறு ஏரிகள் குளங்கள் உள்ளதால் மழைநீர் சேகரிப்பு என்பது மிகச் சிறந்த முறையில் செயல்படுத்துவதற்கான கட்டமைப்பை சென்னை கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நீர்நிலைகளை பாதுகாப்பது, புனரமைப்பு உள்ளிட்ட பணிகளை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட நீர் பற்றாக்குறையை சுட்டிக்காட்டிப் பேசிய அவர், தற்போது பெய்துள்ள மழை மற்றும் சென்னை மாநகராட்சி மேற்கொண்ட மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் ஆகியவற்றால் சென்னை மாநகரத்தின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது அவர் குறிப்பிட்டார். மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்படும் அனைத்து கட்டிடங்களிலும் மழைநீர் சேகரிப்பு கட்டாயம் இடம் பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.